Wrong questions in Group 2 exam? -2124744692
குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகளா? - டிஎன்பிஎஸ்சி விளக்கம்! தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள 5,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நேற்று ( மே 21) நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த நிலையில் இத்தேர்வில் சில தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் ஐந்து நாட்களுக்குள் வௌியிடப்படும். விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.