வீட்டுக்குவீடு தென்னங்கன்று இலவசம்! கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, காப்பீடாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள்!!
வீட்டுக்குவீடு தென்னங்கன்று இலவசம்! கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, காப்பீடாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள்!!
சென்னை: வீட்டுக்குவீடு தென்னங்கன்று இலவசம், கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, காப்பீடாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகளை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார். இத்துறைக்கு மொத்தமாக ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழக வரலாற்றில் முதன்முறையாக கடந்தாண்டு ஆகஸ்ட் 14ம் தேதி வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மூலம் வேளாண்மை துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பட்ஜெட்டில் 86 அறிவிப்புகளில் 80 அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், மேலும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இரண்டாவது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன்பேரில், 2022-23ம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 18ம் தேதி) முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு 2வது நிதி நிலை அறிக்கைகைய தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று (மார்ச் 19ம் தேதி) சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிதிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். முன்னதாக, சட்டப்பேரவைக்கு காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வர தொடங்கினர். 9.54 மணிக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வந்தார். 9.55 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர் செல்வம் ஆகியோர் வந்தனர். அப்போது திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்பு அளித்தனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வணக்கம் தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார். 9.56 மணிக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். 10 மணிக்கு சபாநாயகர் வந்ததும் திருக்குறள் வாசிக்கப்பட்டு அவை நடவடிக்கை தொடங்கியது. அவை முன்னவர் துரைமுருகன் இன்று கேள்வி நேரம் கிடையாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து, சரியாக 10.01 மணியளவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் 2022-2023ம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது: உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் இந்த நிதிநிலை அறிக்கைகள் அடிவாரத்தில் இருந்த வேளாண்மையை உச்சிக்கு அழைத்துச் செல்லும் என்ற உறுதியை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீதமுள்ள ஆறு அறிவிப்புகளும் நீண்ட நாள் திட்டம் என்பதனால் உட்கூறுகளை வகைப்படுத்தி திட்ட மதிப்புடன் செயல்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.
கடந்த ஆண்டு விதைக்கப்பட்ட திட்டங்கள் வேரூன்றியுள்ள நிலையில் இவ்வாண்டும் அவை தழைத்து வளர்வதற்கான அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும், இவ்வாண்டு அடுத்த பரிமாண நகர்வுக்குத் தேவையான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. குறுவை சாகுபடிக்கென மேட்டூர் அணையைத் திறக்க குறித்த நாளான 12.6.2021 அன்று திறந்து வைத்ததோடு, ரூ.61 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை வழங்கினார். இதனால், 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 3 லட்சத்து 16 ஆயிரம் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் உயர்ந்திட வழிவகுத்துள்ளார். இது கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனையாகும். மேலும், 2021ம் ஆண்டில் நமது மாநிலத்தில் பெய்த பருவமழையினை திறம்பட பயன்படுத்தும் வகையில், வாய்க்கால்களை தூர் வாருதல், இடுபொருள் விநியோகம், வேளாண் விரிவாக்க சேவைகளை இந்த அரசு முடுக்கிவிட்டதால், 2021-22ம் ஆண்டில் 14.3.2022 வரை, தமிழகத்தின் நெல் சாகுபடிப் பரப்பு 53 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டினைக் காட்டிலும், 4 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கர் கூடுதலாகும்.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகிய முக்கியத் திட்டங்கள் ஒரு பெரும் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக, பாரம்பரிய நெல் ரகங்கள் அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு, இதுவரை 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் திறனை மேம்படுத்த ஆறு வேளாண் கருவிகள் அடங்கிய “வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி நிதியிலும், உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு ரூ.20 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டிலும் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்து 35 ஆயிரம் வேளாண் பெருமக்கள் மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக இடுபொருள் மானியமாக ரூ.154 கோடியே 69 லட்சம் நிவாரண நிதி விவசாயிகளுக்கு முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர், ஒன்றிய அரசினை உரிய காலத்தில் உரங்கள் வழங்கிடத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் பயனாக 17 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி ஆகிய உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு வேளாண் தொடர்பான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் காண்பதற்காக, தலைமைச் செயலர் தலைமையில், உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விவசாயப் பெருமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் துறைவாரியாக தொகுக்கப்பட்டு வருகின்றன.
* தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று ஆறாவது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், வேளாண்மையில் அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக மாற்றுப்பயிர் சாகுபடி முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் கீழ், அதிக நீர்த்தேவை கொண்ட பயிர்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் சாகுபடியை விவசாயிகளிடையே பரவலாக்கம் செய்திட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* மானாவாரி நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களான நீர்சேகரிப்புக் கட்டமைப்புகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கிடவும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2022-23ம் ஆண்டில் வேளாண்மையில் இந்தக் கூறுகளெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 126 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டுவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
* கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதோடு எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு ஊரகப்பகுதிகளில் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. வரும் 2022-23ம் ஆண்டில் இத்திட்டம், 3204 கிராமப் பஞ்சாயத்துக்களில் ரூ.300 கோடியில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.
* முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் மூலம் ரூ.132 கோடியில் 7 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 3 ஆயிரம் மானாவாரி நிலத் தொகுப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம் மூன்று லட்சம் மானாவாரி விவசாயிகளின் வருமானமும் வாழ்வாதாரமும் உயர்ந்திடும். வேளாண் இடுபொருள்களும் விதைகளும் மானியத்தில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் பயன்பெறும் கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
* இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில், கடுமையான நிதி நெருக்கடியிலும், மாநில அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர்முயற்சியினால், 2020-21 ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகையாக இதுவரை ரூ.2 ஆயிரத்து 55 கோடி 9 லட்சத்து 26 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2 ஆயிரத்து 339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விவசாயிகளின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்யவும் அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் ஏதுவாக பல்வேறு கூறுகளை உள்ளடக்கி மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.
* 2022-23 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான வாழ்விற்கு நஞ்சற்ற, நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்திட இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பசுந்தாள் உர விதைகளும், மண் புழு உரம், அமிர்தக் கரைசல் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள உழவர், உழவர் உற்பத்தியாளர், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திலுள்ள 100 குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நிதியுதவியும் வழங்கப்படும். இது தவிர, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து 150 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் ஏழு ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ரூ.5 கோடி ஒன்றிய, மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* அறுவடை செய்த விளை பொருட்களை இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாப்பதற்கும், உலர் களமாகப் பயன்படுத்துவதற்கும் 60 ஆயிரம் விவசாயிகளுக்குத் தார்பாய்கள் ரூ.5 கோடி மானியத்தில் வழங்கப்படும்.
* தென்னையில் காய்ப்புத்திறனை அதிகரிக்கவும், எண்ணெய்ச் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வதைக் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டக்கலவை, பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை மானியத்தில் வழங்கிடவும். ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி, உயிரி பூச்சிக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள் வழங்கிடவும், தென்னை, மா, முந்திரி போன்ற பல்லாண்டுப்பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி குறித்த செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதற்கும் 2022-23ம் ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி.
* பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக ரூ.5 கோடி
கரும்பு விவசாயிகளுக்கு உதவி
* மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை - கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950
* கரும்பு சாகுபடிக்கு உதவி - ரூ.10 கோடி
* சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் - ரூ.4.5 கோடி
* மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி
* தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க - ரூ.30 கோடி
* தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி.
* பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி
* தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி
* உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி
* காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி
* பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி
* பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி
* பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி
* முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் - ரூ.65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடி
* 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூ.10 கோடி
* ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.
* மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.
* திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் ரூ.381 கோடியில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள்,
* கிராம அளவிலான மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் 38 கிராமங்களில் அமைக்க ரூ. 95 கோடி
* 3 கோடியில் 5 தொழில் கற்கும் சிறுமையங்கள்.
* 295 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு ரூ.5 கோடி.
* சென்னை மற்றும் திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்க ரூ. 15 கோடி
* பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் \\” மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி.
* மாநில அளவிலான \\”உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம்\\” அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்
* ஆறு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 36 கோடி.
* பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.125.44 கோடி
* 60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு ரூ 10.32 கோடி
வேளாண் சார்ந்த துறைகளின் செயல்பாடுகள்
* காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி.
* அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி.
* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு ரூ.5,157.56 கோடி.
* ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்.
* விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கிமீ நீளத்தில் சாலைகள்.
* தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி.
* வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு
* சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
* திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிட்கோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை.
* வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி
* வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.
மேலும் ஒட்டுமொத்தமாக வேளாண் துறைக்கு ரூ.33,007.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். அமைச்சரின் இருக்கை அருகே நவதானிய கூடை: வேளாண்மை பட்ஜெட்டை முன்னிட்டு அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர் செல்வம் இருக்கையில் பட்ஜெட் உரையை வாசிக்க ஏதுவாக மேடை போடப்பட்டிருந்தது. அதன் அருகில் ஒரு கூடையில் அரிசி உட்பட நவ தானியங்கள் சிறிய பைகளில் வைக்கப்பட்டிருந்தது.
இது, அனைவரையும் கவர்ந்தது. பாமக உறுப்பினர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்தனர்: வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், கலந்து கொள்ள சட்டப்பேரவை பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் வந்தனர். அவர்கள் இன்று வேளாண் பட்ஜெட்டை என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாமக எம்எல்ஏக்கள் பச்சை துண்டு அணிந்து வந்திருந்தனர்.
Comments
Post a Comment