கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடி! இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் உச்சகட்டம்!


கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடி! இலங்கையில் பொதுமக்கள் போராட்டம் உச்சகட்டம்!


கடுமையான பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் விடியவிடிய கொட்டும் மழையில் மக்கள் போராட்டம் நடத்தினர். தற்கால அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய அதிபர் கோத்தபய முடிவு செய்துள்ளார். அதேநேரம் பாகிஸ்தானில் நடந்தது போல் கோத்தபய ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் பதற்றமான நிலையே நீடிக்கிறது.

வரலாறு காணாத இந்த நெருக்கடியால் தீர்வு காண வழிதெரியாமல் ஆளும் ராஜபக்சேக்களின் அரசு திணறி வருகிறது. நாடாளுமன்றத்தில் 3 நாட்களாக விவாதம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அந்தவகையில் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா (எஸ்ஜேபி) கட்சி திட்டமிட்டுள்ளது.

225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்த கட்சிக்கு 54 உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கூட்டணி அரசில் இருந்து 42 எம்பிக்கள் சமீபத்தில் விலகியதால் ராஜபக்சே அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் பதவி நீக்க தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. காலேயில் உள்ள அதிபரின் அலுவலகத்துக்கு அருகே நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிபர் செயலகத்திற்கு முன் கொட்டும் மழையிலும் நேற்றிரவு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் கொழும்புவில், அதிபரின் செயலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி வரும் மக்கள், ராஜபக்சே குடும்பத்தினர் அனைவரும் இலங்கை அரசில் விலக வேண்டும் என்று கோஷமிட்டனர். இலங்கையில் தொடர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ‘மாணவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும், தங்கள் அரசியல் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளவும், ஆன்லைன் மற்றும் நேரில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தவும் இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவது தொடர்பாக சர்வதேச நிதியத்துடன் நாளை (திங்கட்கிழமை) இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு 3 பில்லியன் டாலர் அளவுக்கு உதவி பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற 26 அமைச்சர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினர். எதிர்கட்சிகளுடன் இணைந்து கூட்டு அமைச்சரவை அமைக்க கோத்தபய எதிர்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மாறாக கோத்தபய தலைமையிலான இடைக்கால அரசில் இடபெறமுடியாது என்று அறிவித்தனர்.

சிக்கலான இந்த நிலையில் நாட்டின் ஏனைய அலுவல்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வசதியாக நிதி, வெளிவிவகாரம், கல்வி மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கான 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் தற்காலிக அமைச்சரவை அடுத்த சில நாட்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரம் குறித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சிகளும், மக்களும் கூறிவரும் நிலையில், பெரும்பான்மை பலத்தையும் ஆளுங்கட்சி இழந்துள்ளது. அதனால் பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தது போல் இலங்கையிலும் நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றத்தின் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் எதிர்கட்சிகள் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog